Total Pageviews

Saturday, November 5, 2016

பஞ்சம்.....! Famine in India...




பஞ்சம்.....! written by  Amaravathy Prem Pudhur  
https://www.facebook.com/profile.php?id=1518658289
எனக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். நான்கு வருடங்களாகத் தொடர்ந்து பருவ மழை பொய்த்துப் போனது. ஊரெங்கிலும் கடுமையான வறட்சி. குடிக்கவே தண்ணீர் இல்லை.. ஏரிகள் குளங்கள் வறண்டன. ஆடு மாடுகளுக்கு உணவுக்கு வழி இல்லாமல் பனை ஓலைகளை வெட்டிப் போட வேண்டிய சூழ்நிலை. ஏரிப் பகுதிகளில் பட்டுப் போன புற்களை இழைத்து வந்து அதில் ஒட்டி இருக்கும் மண் துகள்களை மரக் கட்டைகள் கொண்டு அடித்து நீக்கி மாடுகளுக்கு இரையாகப் போடப்பட்டது. அந்தவேளையிலும் முன்னோர்கள் நீரோட்டம் பார்த்து வெட்டி வைத்த ஒரு சில பழைய கிணறுகள் தண்ணீரைச் சுரந்தன. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கிணற்றடிக்குச் சென்றால்தான் தண்ணீர் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால் தண்ணீர் முழுவதையும் ஊர் மக்கள் கொண்டு சென்று விடுவார்கள். கொண்டு வரும் தண்ணீரில்தான் குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். என் வீட்டில் இரண்டு தென்னைகள் காய்க்கும் பருவத்தில் இருந்தன. சில மாதங்கள் தென்னைகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினோம். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தண்ணீர் ஊற்ற இயலாமல் பாளை விட்ட தென்னைகள் இரண்டும் பட்டுப் போனது மனதிற்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. ஆடு, மாடுகள் இல்லாத ஒரு சில குடும்பங்கள் பஞ்சம் பிழைப்பதற்காக பட்டுக்கோட்டைப் பக்கம் குடும்பத்துடன் சென்று விட்டார்கள். மாடுகளுக்கு இரை போட வழியில்லாமல் பசுமாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அடிமாட்டுக்காரரிடம் (மாடுகளைக் கறிக்காக வாங்குபவர்) கொடுத்தாயிற்று. வேறு மாநிலங்களில் இருந்து மரவள்ளிக் கிழங்கைப் பிரதான உணவாக உட்கொள்ள அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அந்த மரவள்ளிக் கிழங்கிலும் நச்சுத்தன்மை இருந்து ஒரு சில குடும்பங்கள் கொத்துக் கொத்தாக இறந்து விட்டார்கள் எனும் செய்தி கேள்விப்பட்டு மரவள்ளிக் கிழங்கை வாங்கவே மக்கள் அஞ்சினார்கள். அரிசிச் சோறு என்பது ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாகி அரிதாகிப் போனது. அரசின் நியாய விலைக் கடைகளில் பூச்சி பிடித்த கோதுமை, சோளம் வாங்குவதற்கு கடுமையான வெயிலில் மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. பூச்சி பிடித்த சோளம், கோதுமையை வெயிலில் உலர வைத்து பூச்சிகள் எல்லாம் இறந்த பின் அதைச் சுத்தம் செய்து அதை மாவாக அரைக்க மாவு ஆலையில் அடுத்த நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம். வசதியான ஒரு சிலரின் வீட்டுப் பிள்ளைகள் என்னைப் போன்றோரிடம் வந்து "இன்று எங்க வீட்டில் அரிசிச் சோறு சாப்பிட்டோம்" என்று பீற்றிக் கொள்ளும் ஒரு அவல நிலை நிலவியது. காலை நேரங்களில் கோதுமை மற்றும் சோளக் கூழ் வீட்டு வாசல்களில், அடுப்பில் பொங்கிக் கொண்டிருக்கும். கோதுமைக் கூழாவது கொஞ்சம் சுவையாக இருக்கும். ஆனால், சோளக் கூழ் ஒரு கெட்ட வாசம் வீசும். இருந்தாலும் அதைத்தான் சாப்பிட்டு ஆக வேண்டும். ஆனால், மனதுக்குள் அரிசிச் சோறு சாப்பிட மனம் ஏங்கும். ஒருநாள் நான் என் அம்மாவிடம், எனக்குக் கூழ் வேண்டாம்.. அரிசிச் சோறுதான் வேண்டும் என்று அடம் பிடிக்க, என் அம்மாவுக்கோ தர்மசங்கடமான சூழ்நிலை. மகனின் விருப்பத்தை நிறைவேற்ற யார் வீட்டிலோ கொஞ்சம் அரிசி வாங்கி வந்து எனக்குச் சோறாக்கித் தந்தார்கள். அரிசிச் சோறு முழுவதும் வெள்ளையாக இராமல் சில கருப்பு நிற சோறுகளும் இருக்கவே... நான் சாப்பிட அடம் பிடிக்க, வேதனை அடைந்த என் அம்மா கருப்பு நிறச் சோறுகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துத் தூர எறிந்து விட்டுக் கொடுத்தவுடன்தான் சாப்பிட்டேன். நான் பெரியவனான பிறகு இந்த நிகழ்வை என்னிடம் நினைவுபடுத்தவே, இக்கட்டான காலத்தில் நம் தாயைச் சிரமப்படுத்தி இருக்கிறேனே என்று வேதனை அடைந்தேன். ஆனால், அதற்குப் பிறகு இன்று வரையில் நான் ஒரு சோற்றைக் கூட வீணாக்குவதில்லை. நான் சாப்பிட்டு முடித்த சாப்பாட்டுத் தட்டைச் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று என்னை என் குடும்பத்தினர், உறவினர்கள் கேலி செய்வார்கள். ஏன் என்றால் நான் சாப்பிட்டு முடித்த தட்டு அந்த அளவுக்கு ஏற்கனவே சுத்தம் செய்தது போலிருக்கும். விவசாயிகளின் சிரமங்களை அறிந்த எவனும் நிச்சயமாக உணவை வீணாக்க மாட்டான்.....! ஆம்.... அயல்நாட்டில் பணிபுரிந்தாலும் நான் ஒரு தமிழக விவசாயி.....! நீங்களும் உணவை வீணாக்காதீர்கள்..! நீங்கள் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் ஒரு விவசாயியின் வியர்வையால் வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.....! நன்றி.....!
(புகைப்படத்தில் நெற்கதிர்களால் அழகு மிளிரும் என் விவசாயப் பண்ணை. பழைய படம்.)
பஞ்சம்.....! written by  Amaravathy Prem Pudhur  
https://www.facebook.com/profile.php?id=1518658289