தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்
‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?
ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல். இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது ‘பழனிமலை பாதுகாப்புக் குழு’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.
‘‘தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு சார். ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள்.
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருக்கு. ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு மரம் இருந்துச்சா?ன்னு கேட்கற மாதிரி ஆகிருச்சு. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்துட்டோம்’’ – வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.
‘‘தமிழ்நாட்டுல இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பத்தி ஒரு அகராதியே போடலாம். அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது. ‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்… இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.
அதுக்கெல்லாம் பதிலா, ‘தைல’ மரம், ‘சீமைக் கருவேலம்’, ‘யூஃபோடீரியம்’, ‘தூங்குமூஞ்சி’ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்க ஆக்கிரமிச்சிடுச்சு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்துரும். அதிகளவு நீரையும்' உறிஞ்சும். இதனால, புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிடுச்சு. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழிச்சிருச்சு. இப்படி வளர்ற மரங்கள்ல காய்கள், பழங்கள்னு எதுவுமே வராது. அதனால பறவைகளும் இல்லாம போயிருச்சு’’ என ஆதங்கப்படுகிறவர், நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.
‘‘ உசில்" மரம் வறட்சியைத் தாங்கி வளரும். எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.
"வேங்கை" மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க. மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.
"இலுப்பை" மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.
"தோதகத்தி" மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க. அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.
இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் குறுஞ்செடிகள்னு நம்ம ஊர்ல நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. இதுல ‘துத்தி’ன்னு ஒரு செடி… மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளர்ற இடத்துல வச்சா, தொடர்ந்து பார்த்தீனியம் வளராது’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க. 1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.
‘‘ஆரம்பத்துல அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்னுதான் இதையெல்லாம் நினைச்சோம். அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம். அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரியம்னு தெரிய வந்துச்சு. அதனால இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி வனங்களுக்குப் போனோம். இன்னைக்கு எங்க நாற்றங்காலில் 65 வகையான மரக் கன்றுகள் இருக்கு. எல்லாமே பழமையான அரிதான மர வகைகள்.
புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம சந்திச்சுக்கிட்டு இருக்கோம். வீட்டுக்கு ஏ.சியைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியா வச்சிக்க நினைக்கறவங்க, ஒரு பாரம்பரிய மரம் நட்டா இந்த பூமியும் குளிர்ச்சியாகும்னு நினைக்கணும். மழையை அதிகப்படுத்தி, நீர்வளத்தை தக்க வச்சு, இந்த பூமியை வளப்படுத்தவும் இது மாதிரி மரங்களைத்தான் நாம நம்பியாகணும்!’’ என்கிறார் அவர் அழுத்தமான குரலில்.
மரங்கள் தருதே ஷாம்பு:
* உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.
* ‘வழுக்கை மரம்’ எனப்படுகிற ‘தடசு’ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால், வழுவழு ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புக்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.
* மருத மரத்தின் பட்டையைக் காய வைத்து, கஷாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும்.
* தாண்டி மரத்தில் காய்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.
- மரபை மீட்டெடுப்போம்
Share as much as u can....
We are planning to revive these trees in Tamil Nadu
For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,
CEO, SUGA Consulting Services
Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149
SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004
Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room